இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் குறித்து (பிசிசிஐ) சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

2023ஆம் ஆண்டு ஆசியக்கோப்பையை நடத்தும் ஹோஸ்டிங் உரிமையை பாகிஸ்தான்பெற்றுள்ள நிலையில், கடந்த ஆண்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் போட்டி நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்றும், தெரிவித்தார். எனவே ஆசிய கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது..  ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தங்கள் சொந்த நாட்டில் போட்டியை நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதே சமயம் ஆசிய கோப்பையில் விளையாட வராவிட்டால் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல் விடுத்தது..

இதனிடையே சில நாட்களுக்கு முன் பஹ்ரைனில் நடந்த ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) கூட்டத்தில் 2023 ஆசிய கோப்பை நடைபெறும் இடம் குறித்து ஒருமித்த கருத்தை எட்டவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி தங்களது நாட்டில் நடத்துவதில் உறுதியாகவுள்ளார். அதேபோல இந்தியாவும் பாகிஸ்தானுக்கு செல்ல தயாராக இல்லை.. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும்என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2023 ஆசிய கோப்பைக்கான இடம் மார்ச் மாதம் முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்டத், இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஆசிய கோப்பை 2023 தொடர் குறித்து பேசிய மியான்டட், ‘பாகிஸ்தானுக்கு வர விரும்பவில்லை என்றால் இந்தியா நரகத்திற்குச் செல்லலாம் என்றும், அதன் உறுப்பினர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ஐசிசி) வசைபாடினார்.

இதை நான் முன்பே கூறியுள்ளேன், பாகிஸ்தானுக்கு வர விரும்பவில்லை என்றால் இந்தியா நரகத்திற்கு செல்லலாம். அது நம்மைத் தொந்தரவு செய்யாது. இந்தியா வருவதை உறுதி செய்வது ஐசிசியின் வேலை. ஐசிசியால் அதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், ஆளும் குழுவாக இருந்து என்ன பயன். இந்தியா வரமுடியாது என்று கூறிக்கொண்டே இருந்தால் அவர்களை ஐசிசி கவுன்சிலில் இருந்தே நீக்கிவிட வேண்டும் என யூடியூப்பில் வீடியோவில் கூறினார்.

மேலும் ஐசிசி ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விதியை வைத்திருக்க வேண்டும். அத்தகைய அணிகள் வரவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும், நீங்கள் அவர்களை நீக்க வேண்டும்,” மியான்டட் மேலும் கூறினார். பாகிஸ்தானில் விளையாடுவதை விட்டு இந்தியா ஓடுகிறது. அவர்கள் விளையாட வேண்டும், அவர்கள் ஏன் விளையாடுவதில்லை? அவர்கள் பின்விளைவுகளுக்கு பயப்படுகிறார்கள்,” என்று கூறினார்.

தொடர்ந்து அவர், இந்தியாவின் கூட்டம் (ரசிகர்கள் ) ‘மோசமானது’. இந்தியா எப்போது தோற்றாலும், அவர்கள் வீடுகளை எரிப்பார்கள். அதற்குத்தான் அவர்கள் பயப்படுகிறார்கள். விளையாட மறுக்கும் இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நாடும் இப்படி நடந்து கொண்டால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஒரு விதி இருக்க வேண்டும். ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்நிலையில் மியான்டத்தின் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ட்விட்டரில் ஒரு வரியில் பதிலடி கொடுத்துள்ளார்.. அதில், “ஆனால் அவர்கள் நரகத்திற்கு செல்ல மறுக்கிறார்கள்  என்று ட்விட் செய்தார். அதாவது, நரகம் என்பதை பாகிஸ்தான் என குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இந்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆசிய கோப்பை 2023 இந்த ஆண்டின் இறுதியில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..