மும்பை குர்லா பகுதியில் 34 வயதுடைய பெண் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த மூன்றாம் தேதி அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிரியாணி கடையிலிருந்து சிக்கன் பிரியாணி வாங்கி வந்தார். அதனை குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு எலும்பு துண்டு பெண்ணின் தொண்டையில் சிக்கியது. பின்னர் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது 3.2 சென்டிமீட்டர் அளவுள்ள எலும்பு தொண்டையில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்து அந்த எலும்பு துண்டை எடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் அறுவை சிகிச்சையின் போது எலும்பு துண்டு தொண்டையில் இல்லை. மாறாக மூச்சு பகுதியில் சிக்கியிருந்தது தெரியவந்தது. பொதுவாக தொண்டையில் சிக்கிய பொருட்கள் மேலே செல்லாது. ஆனால் எலும்பு துண்டு நகர்ந்து மூச்சுப் பகுதியில் சிக்கியதால் இரண்டு மணி நேரத்தில் முடியக்கூடிய அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு மருத்துவர்கள் எலும்பு துண்டை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்வாகம் நன்கொடை மூலம் 4 லட்சம் பணம் திரட்டியது. அந்த பெண்ணின் குடும்பத்தினர் 4 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தினர். 8 லட்சம் ரூபாய் வரை செலவானது மட்டுமில்லாமல் எட்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யும் நிலை வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.