தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இதைத்தொடர்ந்து சமீபத்தில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனால் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது நடைபெற்று வருகிறது. முன்னதாகவே மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் தற்போது பலரும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதன் பிறகு அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக தற்போது ஒரு அரசு பள்ளி செய்த விளம்பரம் மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி பகுதியில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் பெற்றோர் வசதிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய அந்த பள்ளியின் சார்பில் க்யூ ஆர் கோடு ஸ்கேனிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர்கள் பெரிய பேனராக வைத்துள்ள நிலையில் இந்த விவரம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தெரியவந்தது. மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததோடு அந்த அரசு பள்ளிக்கு பாராட்டுகளையும் தெரிவித்து சூப்பர் என பதிவிட்டுள்ளார்.