தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன்  நிறைவடைய உள்ள நிலையில் நேற்று  அவை நடவடிக்கை அரசியல் களத்தில் தீப்படிக்கச் செய்துள்ளது. காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையும், அதற்குத் திமுக உறுப்பினர்கள் காட்டிய கடும் எதிர்ப்பும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரை வழங்கினார்.

அப்போது திமுக மீது பல்வேறு பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், கடந்த கால அமலாக்கத்துறை வழக்குகள், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா ஆணையம் போன்றவற்றை சுட்டிக்காட்டிப் பேசினார். முதலமைச்சரின் இந்தப் பேச்சு அவையில் உடனடியாகக் கடுமையான எதிரொலியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் விஜய் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் அவையின் நடுவே எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவை நடுவே தர்ணா போராட்டத்திலும் குதித்தனர்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் தங்களது வாதங்களை வைக்கச் சட்டப்பேரவைத் தலைவர் முறையான நேரம் தரவில்லை எனக் கூறி திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவையைப் புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தவெகவின் இந்த நூறு நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீரழிந்துள்ளதை நாங்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினோம்.

ஆனால், அதற்கு நியாயமான பதிலை அளிக்க முடியாமல், முதலமைச்சர் விஜய் எந்தவித ஆதாரமும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தியுள்ளார். அவர் குறிப்பிட்ட அனைத்து வழக்குகளும் பழைய மற்றும் விசாரணையில் உள்ளவைதான். மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை அவர் மறந்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவை மோதல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சமூக வலைதளங்களில் அரசியல் போர் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ‘ஸ்டோரி’ இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

அதில், முதலமைச்சர் விஜய் முன்னர் கதாநாயகனாக நடித்து வெளியான ‘சுறா’ திரைப்படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சி ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். மறைமுகமாக இன்றைய பேரவை விவாதத்தை ஒப்பிட்டு அவர் பதிவிட்டுள்ள இந்த கிண்டலான ஸ்டோரி, இணையவாசிகளாலும் அரசியல் விமர்சகர்களாலும் தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.