சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரைதான் அவை குறிப்பில் ஏற்றப்படும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதனிடையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை முன் மொழிந்த போது, ஆளுநர் ஆர்.என்.ரவி அவையிலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் இணையத்தில், #GetOutRavi ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஆளுநருக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டரும் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் விசிக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாடுகளை எதிர்த்து போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஆளுநரை கண்டித்தோ, தாக்கியோ யாரும் பேசவேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் இவ்வாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.