உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதி உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை செலவை சமாளிக்க முடியாத மனைவி தனது கணவரை தனியார் ஆம்புலன்ஸில் வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த ஆம்புலன்ஸில் கணவனின் சகோதரனும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவரும் உதவியாளரும் பாதி வழியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர்.

அந்த பெண் ஒத்துழைக்க மறுத்ததால் அவர்கள் நோயாளியின் ஆக்ஸிஜன் சப்போர்ட்டை துண்டித்து மூவரையும் ஆம்புலன்ஸில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். ஆக்ஸிஜன் சப்போர்ட் இல்லாததால் அந்த பெண்ணின் கணவர் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான உதவியாளர் ரிஷப் சிங் என்பவரை கைது செய்தனர். ஆம்புலன்ஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.