தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்காக விளம்பரங்களில் நடித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த 29 பிரபல நடிகர், நடிகைகள் மீது அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா தாகுபதி உள்ளிட்டோரும், நடிகைகள் நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்ளிட்டோரும் அடங்குகிறார்கள்.

இவர்கள், சட்டவிரோதமாக செயல்பட்டதாக கூறப்படும் ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்ட செயலிகளுக்காக விளம்பரங்களில் நடித்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட இந்த பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் தோன்றியது, பொது மக்களிடம் தவறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவை பலரை நிதிநஷ்டத்தில் ஆழ்த்தியதாகவும் புகார்கள் எழுந்திருந்தது.

இதனையே தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக அழைத்துள்ளது. இதுதொடர்பாக, “நாங்கள் விளம்பர ஒப்பந்தத்தின் கீழ் மட்டுமே நடித்தோம். யாரையும் சூதாட்டத்தில் ஈடுபட ஊக்குவிக்கவில்லை. ஒழுங்குமுறை நிறுவனங்களின் சட்ட அனுமதியுடன் தான் இந்த விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டன” என குற்றம்சாட்டப்பட்ட பிரபலங்கள் தரப்பில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், சமீபத்தில், இத்தகைய விளம்பரங்கள் மூலம் பலரும் மோசடியின் பலியாகியுள்ளதாகவும், அதில் பிரபலங்களின் ஆதரவு முக்கிய பங்கு வகித்ததாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியதன் பேரில் இது பெரும் சர்ச்சையாகப் பெருகியுள்ளது. மேலும், இது திரைத்துறையை மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்களில் அதிகப்படியான பிரபலம் பெற்றுள்ள சமூக வலைதள முன்னணியாளர்களையும் பாதிக்கக்கூடியதாயிருக்கிறது.

அவர்களும் இத்தகைய விளம்பரங்களில் செயல்பட்டிருக்கலாம் என அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதனால், இனி வரும் நாட்களில் மேலும் பல பிரபலங்கள் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தென்னிந்திய திரையுலகிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.