சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள் மற்றும் மூடநம்பிக்கைகள் சில நேரங்களில் எவ்வளவு பெரிய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அரங்கேறிவரும் கொடூர சம்பவங்கள் ஒரு சாட்சியாக அமைந்துள்ளன. டிக் டாக், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பரவிய விசித்திரமான மற்றும் பொய்யான “உறுப்பு திருட்டு”  வதந்திகள் காரணமாக, ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் கும்பல் தாக்குதலுக்கு இரையாகிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிபிசி (BBC) மற்றும் அதன் உலகளாவிய தவறான தகவல் பிரிவின் அறிக்கையின்படி, கடந்த 2025 அக்டோபர் முதல் 2026 ஜூலை வரையிலான காலகட்டத்தில், குறைந்தது ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வதந்தியால் 80-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ ஜனநாயக குடியரசு, புருண்டி, ஜாம்பியா, தான்சானியா, மோசாம்பிக், அங்கோலா, மலாவி மற்றும் கென்யா உள்ளிட்ட குறைந்தது எட்டு நாடுகளில் இந்த விசித்திரமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

ஒருவருடன் உடல்ரீதியான தொடுதல் அல்லது தொடர்பு ஏற்படும்போது, மற்றொருவரின் ஆணுறுப்பு அல்லது விதை சுருங்கிவிடும் அல்லது காணாமல் போய்விடும் என்ற முற்றிலும் அறிவியல் ஆதாரமற்ற மூடநம்பிக்கையே இந்த வதந்தியின் அடிப்படையாகும்.

பாரம்பரியமான உள்ளூர் சூனிய நம்பிக்கைகளுடன் தொடர்புடைய இந்த மூடநம்பிக்கை, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் மூலம் எல்லைகளைத் தாண்டி வேகமாகப் பரவியுள்ளது. குறிப்பாக, காங்கோ ஜனநாயகக் குடியரசில் தோன்றியதாகக் கூறப்படும் இந்த வதந்தி, 2025-க்குப் பிறகு டிக் டாக் வீடியோக்கள், பேஸ்புக் பதிவுகள் மற்றும் ரீல்ஸ் மூலம் காட்டுத் தீ போல பரவி மக்களின் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.

இந்த வதந்தியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு மோசாம்பிக் ஆகும். கடந்த மே மாதத்தில் மட்டும் வெறும் ஆறு வாரங்களுக்குள் அங்கு நடந்த கும்பல் தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் ஒரு காவல்துறை அதிகாரியும், மருத்துவப் பணியாளர்களும் கூட வதந்திக்குப் பலியாகியுள்ளனர்.

தான்சானியாவில் பொனிபேஸ் ம்காலா  என்ற மெக்கானிக், கார் விற்பனை தொடர்பாகச் சென்றபோது இதே வதந்தியால் கும்பலால் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், டார் எஸ் சலாம் நகரில் ஒரு நபர் மார்க்கெட்டில் வைத்து தாக்கப்படும் வீடியோக்கள் வைரலாகின.

இதேபோல் கென்யாவின் கடலோரப் பகுதிகளில் கும்பல் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொம்பாசா கவுண்டி ஆணையர் முகமது நூர், சமூக வலைதளங்களில் வியூஸ்காக இதுபோன்ற போலிச் செய்திகளைப் பரப்பும் உள்ளடக்க உருவாக்குநர்களே இதற்குக் காரணம் என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். மலாவி நாட்டிலும் வன்முறை வெடித்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது முற்றிலும் பொய்யான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று அரசுகளும் மருத்துவ நிபுணர்களும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். மனிதர்களின் உடல் உறுப்புகள் காற்றில் மறைந்துவிடவோ அல்லது திருடப்படவோ வாய்ப்பில்லை. மனநல மருத்துவத்தில் கூறப்படும் கோரோ நோய்க்குறி’ என்ற மனநல நிலை காரணமாக, தங்களது உறுப்புகள் சுருங்குவதாகத் தாங்களே தவறாக நினைத்துக் கொள்ளும் அச்சமே இதற்கு அடிப்படைக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோசாம்பிக் அதிபதி டேனியல் சாபோ உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இந்த வதந்திகளைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, பொதுமக்களை விழிப்புடன் இருக்கவும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.