
கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள காஞ்சங்காடு பகுதியில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 46 வயதான ஒருவர், தன்னுடைய ஆணுறுப்பின் மேல் சிக்கிய இரும்பு நட்டால் இரண்டு நாட்களாக சிறுநீர் கூட கழிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மிகவும் வேதனைக்குள்ளான நிலையில், அவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உதவி கேட்டுள்ளார்.
அவர், குடிபோதையில் இருந்தபோது தவறுதலாக நட்டை அணிந்ததாகவும், அதை அகற்ற முடியாமல் இரு நாட்களாக நெருக்கடியான வேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை கேட்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அந்த நட்டை அகற்ற முயற்சி செய்தனர். பலமுறை முயற்சி செய்தும் வெற்றி பெற முடியாத நிலையில், தீயணைப்புத் துறையின் உதவியை நாடினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நட்டு ஆணுறுப்பில் வலுவாக சிக்கியிருப்பதை கவனித்து, கட்டரை கொண்டு அதை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டரை பயன்படுத்தும் போது ஏற்பட்ட வெப்பம் ஆணுறுப்பை பாதிக்காத வண்ணம் அடிக்கடி தண்ணீர் ஊற்றி குளிர்வித்தனர். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தீயணைப்பு வீரர்கள் இரும்பு நட்டை வெற்றிகரமாக அகற்றினர். இதனால் அந்த நபருக்கு பெரும் நிம்மதி கிடைத்தது. இந்த சம்பவம் மருத்துவமனையிலும், சமூக வலைதளங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.