
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பகுதியில் 47 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவரது இளைய மகள் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் கராத்தே பயின்று வருகிறார். 27 வயதுடைய இளம்பெண் கராத்தே பயிற்சி அளிக்கிறார். கடந்த 17-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் டவரை ஆய்வு செய்தனர். தற்போது செல்போன் சிக்னல் தூத்துக்குடியில் இருப்பது தெரியவந்தது.
இதனால் போலீசார் அங்கு சென்று சிறுமியையும் அவருடன் இருந்த கராத்தே பெண் பயிற்சியாளரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது கராத்தே பெண் பயிற்சியாளர் சிறிது காலத்தில் தான் ஆணாக மாற இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சிறுமியை காதலித்து திருமணம் செய்யும் நோக்கத்தில் அழைத்து வந்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரை கூறி சிறுமையை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு நடத்தி வருகின்றனர்.