முதல்வர் ஸ்டாலின் சென்னை எழில் நகரில் மாண்டிச்சேரி மழலையர் வகுப்புகளை பார்வையிட்டார். அவர் கூறியதாவது நாடாளுமன்ற கூட்டத்துறையில் திமுக எம்பிக்கள் எதை பேச வேண்டும் என நீண்ட விவாதங்களுக்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதையே அவர்கள் பேசுவார்கள். அதானி திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவும் கிடையாது. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. அதனால் தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என பேசினார். அதற்கு இப்போது அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் கூறும்போது, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். இப்போது அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் மதிக்கக்கூடிய ஒரு தலைவர் ராமதாஸ். அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை என முதல்வர் ஆணவத்துடன் பேசுவது அவரது பதவிக்கு அழகு இல்லை.

அதானியை ரகசியமாக உங்கள் இல்லத்தில் ஏன் சந்தித்தீர்கள் என ராமதாஸ் கேட்ட கேள்வியில் என்ன தவறு உள்ளது. அரசை கேள்வி கேட்பது எதிர்கட்சிகளின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது கடமை. ஆனால் அப்படி பதில் சொல்லாமல் ராமதாசை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி விட்டீர்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லை என்றால் 2006ல் உங்கள் தந்தை முதலமைச்சராக இருக்க முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் கொடுத்த முழு ஆதரவால் தான் அந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடித்தது.

உங்களையும் உங்கள் தந்தை துணை முதலமைச்சர் ஆக்கினார். நாங்கள் கொடுத்த வழக்கை திரும்ப பெற்றதால் தான் கலைஞர் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் ஆறு சதவீத இட ஒதுக்கீட்டை பெற்று தந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி தலைவரை பார்த்து அவருக்கு வேலை இல்லை என கூறியது முதல்வரின் ஆணவத்தின் உச்சம். கலைஞரிடம் இருந்து முதல்வர் எந்த பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என அன்புமணி ராமதாஸ் கண்டித்துள்ளார்.