தமிழக அரசியலில் பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைதானவர்கள் காவல் துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ இளையராஜாவிடம், ஆட்சியை கவிழ்ப்பதற்காக இந்த அசுர தொகை பேசப்பட்ட விவகாரத்தில் கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் போது, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பின்னணியில் இருந்து இந்தச் சதித்திட்டத்தை இயக்கியுள்ளது என்ற பகீர் உண்மை வெளிவந்துள்ளது. கைதானவர்கள் தங்களது வாக்குமூலத்தில், சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் வைத்து இந்த ஒட்டுமொத்த சதித்திட்டமும் தீட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு வார காலமாக அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து இந்த ஆபரேஷனுக்கான வேலைகளைப் பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த விவகாரம் வெளியே கசிந்துள்ளது. விஷயம் லீக் ஆனதை உணர்ந்தவுடன் ஓட்டல் அறையைக் காலி செய்துவிட்டுத் தப்பியோடியதாக அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.