தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மத்திய இணை மந்திரி பதவி வந்தால் பெற்றுக்கொள்வேன். அதற்காக தற்போது கூண்டுக் கிளியாக இருக்க நான் விரும்பவில்லை. நான் தற்போது ஆடு மாடுகளோடு இருக்கும் நிலையில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது கோவிலுக்கு செல்கிறேன். இது உலகம் சுற்றுவதற்கான ஒரு வாய்ப்பு. கட்சிப் பணிகளையும் அவ்வப்போது செய்து வருகிறேன். நான் தேவையில்லாத வேலையை பார்ப்பதற்கு பதிலாக என்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறேன். தற்போது புத்தகங்கள் படிப்பதோடு என் குழந்தைகளோடு நேரத்தை செலவழிக்கிறேன். என் தாய் தந்தையோடு சாப்பிடுகிறேன்.

வாழ்க்கையில் தற்போது மிகவும் நிம்மதியாக இருக்கும் நிலையில் இதிலேயே பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதுமே ஒரு தொண்டராக பிரதமர் மோடிக்கு பணி செய்வதுதான் என்னுடைய விருப்பம்.

மேலும் தமிழகத்தில் நான் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் எப்போதும் எங்களுடன் தான் இருப்பார். அமித்ஷா தமிழகம் வரும்போது அவரை நிச்சயம் அழைத்து பேசுவார். பிரதமர் மோடியின் இதயத்தில் எப்போதும் அவருக்கு தனியிடம் உண்டு என்று கூறினார். மேலும் ஓபிஎஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.