விருதுநகர் பள்ளி ஆசிரியர் பால் அசோக் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரை சொல்லி பால் அசோக் வசூல் வேட்டை நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள சவுக்கு சங்கர் தற்போது திமுக ஆட்சியிலும் அதே வேலையை செய்து வருவதாக கூறியுள்ளார்.

அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பால் அசோக் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள சவுக்கு சங்கர் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை குவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஆசிரியர் பால் அசோக் குறித்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிருபா ஆனந்த் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விருதுநகர் பாலவனத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவிக்கு எழுப்பிய கேள்வியில், கடந்த 2010-ம் ஆண்டு விருதுநகர் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் பலமுறை பணி மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கல்வி தொலைக்காட்சியில் பணி செய்து வருவதாக தலைமையாசிரியர் கூறியுள்ளார். இவர் தற்போது சென்னையில் தங்கியுள்ள நிலையில் அமைச்சர் உதயநிதி, துர்கா ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் போன்றோரை சந்தித்து வசூல் மட்டும் செய்து வருவதாகவும் பல கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடவடிக்கை எடுப்பாரா என்று தற்போது கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.