
தமிழகத்தில் பள்ளிகளில் சமீப காலமாக ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் ஒரு 13 வயது மாணவியை 3 ஆசிரியர்கள் சேர்ந்து கர்ப்பம் ஆக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதிகள் இனி ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் இது போன்ற குற்றங்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்படுவதோடு அவர்களின் கல்வி தகுதியும் ரத்து செய்யப்படும்.
இந்த அரசாணை முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்த நிலையில் தற்போது பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் கல்வி தகுதியை ரத்து செய்யும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 10 வருடங்களில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியலை சேகரிக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த பட்டியலில் தொடக்க கல்வித்துறையில் 80 பேரும் பள்ளி கல்வித்துறையில் 175 பேரும் என மொத்தம் 255 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களின் பணிநீக்கம் மற்றும் கல்வித் தகுதி ரத்து போன்ற பணிகளை தற்போது பள்ளி கல்வித்துறை துரிதப்படுத்தி உள்ளது.