ஆசியக் கோப்பை T20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்திய அணி  எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்த திலக் வர்மா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவுக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது.

போட்டிக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா அளித்த பேட்டியில், “இது ஏற்றுக்கொள்ள கடினமான தோல்வி. பேட்டிங்கில் நாங்கள் நல்ல முடிவுக்கு வரவில்லை. பவுலிங்கில் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். சில நேரங்களில் சிறு பிழைகள் கூட விளைவுகளை தீர்மானிக்கக்கூடும். ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய முடியாத நிலை இருந்தது. அதனால்தான் எங்களது ரன்கள் குறைவாக உள்ளன,” என தெரிவித்துள்ளார்.

மேலும், “அவர்கள் (இந்திய பவுலர்கள்) மிகச் சிறப்பாக பந்து வீசியதன் விளைவாக நாங்கள் தடுமாறினோம். இறுதியில் 6 ஓவர்களுக்கு 63 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் ஆட்டம் எங்களுக்கே வந்து விட்டது என நினைத்தோம். ஆனால் அவர்களது பவுலிங் மிகச் சரியாக இருந்தது. அவர்களுக்கு பாராட்டுகள்! பேட்டிங் முறைமையில்தான் இன்னும் கவனம் தேவை. இந்த தொடரில் எங்களது செயல்பாடு குறித்து பெருமைப்படுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் வலுவாக திரும்புவோம்,” எனக் கூறினார்.