பதஞ்சலி நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மிகப்பெரிய உணவு மற்றும் மூலிகை பூங்காவை திறந்து வைத்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை, ஆசியாவின் மிகப்பெரிய ஜூஸ் மற்றும் உணவு பதப்படுத்தல் ஆலையாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆலையில் தினமும் 800 டன்கள் ஆரஞ்சு ஜூஸ் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபா ராம்தேவ் நிகழ்ச்சியில் பேசிய போது, “இந்த ஜூஸ் முழுமையாக இயற்கையானது. இதில் சர்க்கரை எதுவும் சேர்க்கப்படவில்லை. இது மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தை வழங்கும் பானமாக இருக்கும். அதோடு, இந்த தொழிற்சாலை விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் உதவியாக இருக்கும். ஆரஞ்சு பழத்திலிருந்து ஜூஸ் மட்டும் அல்லாது, அதன் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படும். இந்த தொழிற்சாலைக்கு மொத்தம் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது, அதில் ஏற்கனவே ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த ஆலையில் ஆரஞ்சு மட்டுமல்லாது, எலுமிச்சை, நெல்லிக்காய், மாதுளம், கொய்யாப்பழம், திராட்சை, கேரட், மாங்காய் போன்ற பல்வேறு பழங்களிலிருந்து ஜூஸ் தயாரிக்கப்படும். இந்த ஆலையின் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடைய வாய்ப்புள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தொழிற்சாலை புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசும் இந்த மாபெரும் திட்டத்துக்கு முழு ஆதரவளிக்கிறது என முதல்வர் ஃபட்னவிஸ் கூறியுள்ளார்.