நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் ஆல்வா எடிசன் (24) என்ற வாலிபர் கலந்து கொண்டார்.

இவர் ஆக்ரோஷமாக வந்த முரட்டுக்காளை அடக்கம் முயன்ற போது எதிர்பாராத விதமாக காளை மாடு அவருடைய தொண்டையில் குத்திவிட்டது. இதில் தொண்டை பகுதியில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கியபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.