
கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் வாடி சந்திப்பு ரயில் நிலையம் உள்ளது. அங்கு டெல்லியில் இருந்து வரும் கர்நாடக எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதுகுறித்து அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக வாடி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
இதனால் ரயிலில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் பயணிகள் அனைவரும் சிரமப்பட்டனர். ரயிலில் உள்ள அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அங்கு எந்தவித வெடிகுண்டும் சிக்கவில்லை. எனவே இது ஒரு வதந்தி என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரணை நடத்திய போது அதே ரயிலில் பயணித்த உத்திர பிரதேசத்தை சேர்ந்த தீப் சிங்(33) என்பது தெரிய வந்தது.
இவர் டெல்லியில் இருந்து குண்டக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். இதனால் தீப் சிங்கிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தன் தந்தை மீது இருந்த கோபத்தினால் இப்படி செய்ததாகவும் தீப் சிங் கூறியுள்ளார். எனவே தீப்சிங்கை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.