காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி ரேபேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அயோத்தியில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இதேபோன்று வாரணாசி தொகுதியில் எனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் பிரதமர் மோடி தோல்வி அடைந்திருப்பார். அவரை பிரியங்கா காந்தி 2 முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. அதாவது நாட்டு மக்கள் மோடியின் அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் தெளிவாக காட்டியுள்ளது.

நமது அரசியலமைப்பு சட்டத்துடன் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் விளையாட நினைக்கிறார்கள் என்பதை இந்த நாடு உணர்ந்து கொண்டது. முதல் முறையாக ஒரு நாட்டின் பிரதமர் கலாச்சாரத்திற்கு எதிராக மதம் மற்றும் வன்முறையை வைத்து அரசியல் செய்தார். உத்திரபிரதேச மாநில மக்கள் வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அரசியலமைப்பின் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்த நாட்டு மக்கள் பிரதமர் மோடிக்கு தெளிவாக உணர்த்திவிட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.