சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கி, இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியும் முதலமைச்சர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், மக்கள் விஜய்க்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளனர் என்றும், அவர் தனது செயல்பாடுகள் மூலம் தன்னை நிரூபிக்க மக்கள் அவருக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதைவிடுத்து, அவர் செயல்படுவதற்கு முன்பே விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் சுரேஷ் கோபி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடிக்கடி இடைத்தேர்தல்கள் நடத்துவது மக்களின் நேரத்தையும், நாட்டின் பல மாதங்களையும் வீணடிக்கும் செயல் என்று குறிப்பிட்ட சுரேஷ் கோபி, ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

ரஜினியின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று கூறிய அவர், ரஜினி அரசியலுக்கு வர விரும்பினால் தாராளமாக வரலாம் என்றும், அவர் தமிழ் மக்களுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.