தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்புகள் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு விஜய் வருகை தந்தபோது, அங்கு போடப்பட்டிருந்த சோபா குறித்து எழுந்த கேள்விக்கு, அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் மிகவும் கலகலப்பான முறையில் விளக்கமளித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் பிரியர்கள் மத்தியில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

​இது குறித்து காதர் மொகிதீன் பேசுகையில், தங்களது முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு இதுவரை எந்தவொரு முதலமைச்சரும் நேரில் வந்தது இல்லை என்றும், விஜய் வருவதாகச் சொன்னபோது, “வேண்டாங்க.. இது ரொம்ப குறுகலான தெரு” என்று தாங்கள் தடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், “வந்தால்தான் நன்றாக இருக்கும்” என்று கூறி விஜய் பிடிவாதமாக வந்ததாகவும், அதற்காக இரவோடு இரவாக தங்களது அலுவலகத்தை அலங்கரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் அமர்வதற்காக “வாடகை சோபாதான்” வாங்கிப் போட்டோம் என்றும், அந்த சோபாவை அடுத்த நாள் காலையிலேயே உரிமையாளர் வந்து எடுத்துச் சென்றுவிட்டார் என்றும் சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். இச்சம்பவம் தவெக தொண்டர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.