
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் மகேஷ் சகலனி-சுபாங்கி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மாத இரட்டை குழந்தைகள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் சுபாங்கி கடைக்கு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இரண்டு குழந்தைகளும் மயங்கி நிலையில் இருப்பதை கண்டார். உடனே தனது குழந்தைகளை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தனது குழந்தைகளின் திடீர் மரணத்தால் சந்தேகமடைந்த மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது இரட்டை குழந்தைகள் தொடர்ச்சியாக அழுததால் சுபாங்கி தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். இதனால் கோபத்தில் பெற்ற தாயே தலையணையால் அமுக்கி குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் சுபாங்கியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.