திமுக கட்சியின் எம்பி ஆராசா கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

அதிமுகவை போல பாஜகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவை எப்படியாவது தமிழ்நாட்டில் வளரச் செய்ய வேண்டும் என்று சொந்த கட்சியான அதிமுகவையே அழித்துக் கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சித் தொண்டர்களை குமுருகின்ற நிலையை மறைப்பதற்கு திமுக மீது பழி போட்டு திசை திருப்ப நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் நாடகத்தை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் என்பது மேற்கு மாவட்டங்களில் நெடுங்கனவு அதனை 1972 ஆம் ஆண்டில் முதன்முதலில் செயல்படுத்த முனைந்தவர் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சி அமைந்த போது மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதை மேற்கு மாவட்டம் மக்கள் அறிவார்கள்.

அதனால் தான் மேற்கு மாவட்ட மக்களும் விவசாயிகளும் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தலைமையிலான அரசு தான் உறுதியான நடவடிக்கைகள் மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கருணாநிதியை ஒன்றிய அரசு கொண்டாடுவதையும் மேற்கு மாவட்ட மக்களின் நெடுங்கால கனவை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி இருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காந்தாரி போல கதறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்றும் ஆ.ராசா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.