சென்னையில் பைக் டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது. இதை ஓட்டும் இளம் வாலிபர்களை குறிவைத்து ஒரு மோசடி கும்பல் நூதன முறையில் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ராப்பிடோ ஓட்டும் இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு எச்சரித்துள்ளார். அதாவது இந்த மோசடி கும்பல் முதலில் தனது சகோதரி மற்றும் குடும்பத்தினருக்காக பைக் டாக்ஸி புக் செய்கின்றனர். பின்னர் அப்பெண்ணின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதாக கூறுகின்றனர்.

இதையடுத்து அந்த மோசடி கும்பல் நாங்கள் உங்களுக்கு ஜிபே மூலம் பணம் செலுத்துகிறோம் மீதி பணத்தை அந்த பெண்ணிடம் கொடுக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஜிபேயில் பணம் அனுப்பாமல் அனுப்பியது போன்று நூதன முறையில் மெசேஜ் ஒன்றை அனுப்புகிறார்கள். இதனை அறியாத பலர் மோசடி கும்பல் கூறியபடி பணத்தை அனுப்பி ஏமாற்றுவதாக இளைஞர் குற்றம் சாட்டினர். மேலும் இந்த மோசடி பெரும்பாலும் இரவு நேரங்களில் நடப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.