அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சமூக ஊடக தளமான எக்ஸ் (X) இல் பகிர்ந்த இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி, மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. வேகமாக வளர்ந்து வரும் குவஹாத்தி நகரமும், அதனைச் சூழ்ந்த இயற்கையின் அமைதியும் ஒரே காட்சியில் பிரதிபலிப்பதால், இந்த புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த புகைப்படங்களில், குவஹாத்தியின் அடிங்கிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு உயரமான பாறையின் மீது அமர்ந்திருக்கும் சிறுத்தை, கீழே பரந்து விரிந்த நகரத்தை உன்னிப்பாகக் கவனிப்பது போலக் காணப்படுகிறது. நகரத்தின் கட்டிடங்கள், சாலைகள் மற்றும் விளக்குகள் கீழே தென்பட, மேலே மலைச்சூழலில் அமைதியாக அமர்ந்திருக்கும் சிறுத்தை, ஒரு அரசன் தனது ராஜ்யத்தை நோக்கிப் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
முதல் புகைப்படத்தில், சிறுத்தை பெரிய பாறையின் மீது அமர்ந்து, நகரத்தை நோக்கி அமைதியாக இருப்பதும், அதைச் சுற்றி மலைகள், காடுகள் மற்றும் பாறைகள் காணப்படுவதும் பதிவாகியுள்ளது. நகரத்திற்கு மிக அருகில் வனவிலங்குகள் இன்னும் வாழ்ந்து வருகின்றன என்பதை இந்தக் காட்சி உணர்த்துகிறது.
இரண்டாவது புகைப்படத்தில், அதே சிறுத்தை குளிர்கால வெயிலில் அமைதியாக அமர்ந்து ரசிப்பதைக் காணலாம். அதன் மேலே நீல வானமும், பறவைகள் பறக்கும் காட்சியும், புகைப்படத்திற்கு மேலும் அழகையும் உயிர்ப்பையும் அளிக்கின்றன. இரண்டு புகைப்படங்களும் ஒருபுறம் அடர்ந்த காடுகள் மற்றும் இயற்கை அழகை காட்டினாலும், மறுபுறம் வேகமாக விரிவடைந்து வரும் கான்கிரீட் நகர வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன.
இந்த இயற்கை–நகர வளர்ச்சி இடையிலான வேறுபாடே, இந்த புகைப்படங்களை சிறப்பானவையாக மாற்றியுள்ளதாக சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வளர்ச்சிக்கும் இயற்கைக்கும் இடையே சமநிலையை பேண வேண்டிய அவசியத்தை இந்தக் காட்சிகள் நினைவூட்டுவதாகவும் பலர் கூறுகின்றனர்.
A perfect shot, A sight to behold.
A leopard soaking in the winter sun atop Adingiri Hills, overlooking Guwahati’s rise. pic.twitter.com/E61jSL99qo
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 24, 2025
இந்த புகைப்படங்களுடன் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஒரு சரியான புகைப்படம், பார்க்க ஒரு காட்சி. அதிங்கிரி மலைகளில் குளிர்கால வெயிலில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுத்தை, குவஹாத்தியின் உதயத்தைப் பார்ப்பது” என உணர்ச்சிபூர்வமான வாசகத்தை பதிவிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் கேமரா ட்ராப் மூலம் எடுக்கப்பட்டவை என்றும், அவை கடந்த நவம்பர் 25-ம் தேதி எடுக்கப்பட்டதாகவும் புகைப்படங்களில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் புகைப்படம் பிற்பகல் 3.56 மணிக்கும், இரண்டாவது புகைப்படம் மாலை 4.03 மணிக்கும் எடுக்கப்பட்டதாகவும், அப்போது அந்தப் பகுதியில் வெப்பநிலை சுமார் 25 டிகிரி செல்சியஸ் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை, டிசம்பர் 24-ம் தேதி முதலமைச்சர் பகிர்ந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பரவலான விவாதமும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
