
உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர் கண்ணில் பிளாஸ்டிக் போன்ற ஒன்று கிடைப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இதற்காக 45 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டி நவம்பர் 11ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் அதன் பிறகு தான் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இடது கண்ணில் பிரச்சனை என்று கூறிய நிலையில் வலது கண்ணில் கட்டு போட்டு வைத்திருந்தனர். மருத்துவமனையில் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கூறாமல் மரியாதை குறைவாக நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து பெற்றோருக்கு அடுத்த ஒரு அதிர்ச்சியான தகவல் தெரியவந்துள்ளது. நிதின் தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் எந்த கண்ணிலுமே அறுவை சிகிச்சை செய்ததற்கான அடையாளம் இல்லை என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிதின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.