இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். இதில் பில் சால்ட் அதிரடியாக விளையாடிய நிலையில் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது டோனி ஸ்டெம்ப் விக்கெட்டில் அவரை அவுட் ஆக்கினார். இதைத்தொடர்ந்து விராட் கோலியுடன் படிக்கல் ஜோடி சேர்ந்த நிலையில் அவர் 27 ரன்களில் அவுட் ஆனதால் அடுத்ததாக கேப்டன் ரஜத் படிதார் இறங்கினார்.

அதிரடியாக விளையாடிய படிதார் அரை சதம் கடந்தார். இந்த போட்டியில் நிதானமாக விளையாடிய விராட் கோலி 37 ரன்கள் வரை எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து களம் இறங்கிய லிவிங்ஸ்டன் 10 ரன்களிலும், ஜித்தேஷ் ஷர்மா 12 ரன்களிலும் அவுட் ஆன நிலையில் கேப்டன் ரஜத் படித்தாரும் 56 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். மேலும் தற்போது 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியுள்ளது.