சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (ஜூலை 1) முக்கியமான திருப்பத்தை எடுத்துள்ளது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள், “திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். புலனாய்வு செய்யவே காவல்துறை இருக்கிறது; அடிக்க இல்லை” என கடும் கண்டனம் தெரிவித்தனர். சாட்சிகளை சேகரிக்க தவறிய காவல்துறையையும், சிசிடிவி காட்சிகள் குறித்து தெளிவாக பதிலளிக்காத அதிகாரிகளையும் கடுமையாக கேள்விக்குள்ளாக்கினர்.

பிற்பகல் நடைபெற்ற விசாரணையில், மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர், அஜித் குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையை நேரில் தாக்கல் செய்தார். அதில், அஜித்தின் உடலில் 44 காயங்கள் இருந்ததாகவும், அவர் மரக்கட்டை மற்றும் இரும்பு போன்ற  ஆயுதங்களால் தாக்கப்பட்டு, அடித்து கொல்லப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. “இது சாதாரண மரணம் அல்ல, இது திட்டமிட்ட அடித்துக் கொலை” என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும், “அரசே தன் குடிமகனைக் கொலை செய்துள்ளது; இதை மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், அஜித் குமாரின் உடலில் மிளகாய் தூள் போட்டுத் தாக்கப்பட்டிருப்பது, வாயிலும் பிறப்புறுப்பிலும் நேர்ந்த சித்திரவதைகள், காவல்துறையினர் இணைந்து திட்டமிட்ட செயல்பாடு என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். “சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகும் இதுபோல் நடந்தது என்பது தமிழ்நாட்டுக்கே களங்கம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு வேண்டும் என்றும், சிறப்புப்படை நடவடிக்கைகளில் கண்காணிப்பு பிழையடைந்தவர்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். வழக்கு தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு இரு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தமிழ்நாட்டில் காவல்துறையின் சட்டவிரோத செயல்களை ஒழிக்க தீர்மானமாக்கும் முக்கியமான படியாக பார்க்கப்படுகிறது.