தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்ற மனைவியும் கவிபாலா என்ற 13 வயது மகளும் இருக்கிறார்கள். இதில் சிறுமி கவிபாலா ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட பிறகுதான் மாணவி மயங்கி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிட்ட இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.