காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் ஒன்று தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மடோனா (47) என்ற பெண், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை இழந்த அரசு ஊழியர்களைத் தேடி, அவர்களை திருமணம் செய்து கொண்டு, நகை, பணம், சொத்துகளை பறித்து, பின்னர் விவாகரத்து பெற்று தப்பித்துச் சென்றதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஆதனூரைச் சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளர் வனத்தையனின் மகள் செசிலியா, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், மடோனா முதலில் 1993ல் ஊட்டியில் வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் இறந்த பிறகு 2014ல் திருவள்ளூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கனகராஜை திருமணம் செய்து  நகை, பணம் பறித்து விவாகரத்து பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர், 2021ம் ஆண்டு வனத்தையனை திருமணம் செய்து அவரது சொத்துகளையும் கைப்பற்ற முயன்றதாகவும், வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மடோனாவை நேற்று கைது செய்தனர். மேலும், மடோனாவிற்கு எதிராக ஊட்டியில் அரசுக்குச் சொந்தமான இடத்தை  மோசடி செய்த வழக்கும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.