“தற்போது அரசியல் மிகவும் சீரழிந்துள்ளதால், வரும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை” என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். இவரது இந்தத் திடீர் முடிவு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

​இது குறித்துப் பேசிய அவர், “கடந்த 50 ஆண்டுகளாக உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, என்னை அன்போடு அரவணைத்து வழிநடத்தியுள்ளீர்கள். இந்த அளப்பரிய அன்பை வழங்கி என்னை உயர்த்திய கர்நாடக மக்களுக்கு நான் எப்போதும் வாழ்நாள் கடன்பட்டுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

​மேலும், “தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், மக்களின் நலனுக்காகச் ஆற்றும் மக்கள் பணிக்கே என்னுடைய வருங்கால வாழ்வையும் முழுமையாக அர்ப்பணிக்கிறேன்” என்றும் உறுதியளித்துள்ளார்.

​அரசியல் சூழல் கெட்டுப்போயுள்ளதாகக் கூறி, 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா எடுத்துள்ள இந்த முடிவும், அவரது உருக்கமான உரையும் தற்போது சமூக வலைதளங்களிலும் அரசியல் களத்திலும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.