அயோத்தி ராமர் கோவிலின் தலைமைச் அர்ச்சகர் ஆச்சாரியா சத்தியந்திர தாஸ் நேற்று காலமானார். இவருக்கு 85 வயது ஆகிறது. மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததை அவருடைய சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் நேற்று காலமானார். அவருடைய உடல் இன்று சரயு நதி கரையில் தகனம் செய்யப்பட இருக்கிறது.

அவருடைய மறைவுக்கு உத்திரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மத சடங்குகள் மற்றும் வேதங்களில் வல்லவரான அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பகவான் ஸ்ரீ ராமருக்காக அர்ப்பணித்தவர். நாட்டின் ஆன்மீகம் மற்றும் சமூக வாழ்க்கைக்கு அவர் ஆற்றய  பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மேலும் இந்த துயரமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு கடவுள் வலிமை கொடுக்க பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.