
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுரா பகுதியில், சிப்ஸ் பாக்கெட்டைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் கிருஷ்ணேந்து, மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்த பரிதாபம் மாநிலமெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோசாய் பஜாரில் நடந்த இந்த சம்பவத்தில், ஏழாம் வகுப்பு மாணவனான கிருஷ்ணேந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிப்ஸ் வாங்கச் சென்றபோது, கடைக்கு வெளியே கிடந்த ஒரு பாக்கெட்டை எடுத்துள்ளார். ஆனால் கடைக்காரரான சுபாங்கர் தீட்சித், பைக்கில் வந்து சிறுவனைத் துரத்தி பிடித்து, சந்தையின் நடுவே அவமாபடுத்தி அடித்து, காதுகளைப் பிடித்து நெருக்கமான கூட்டத்தில் உட்கார வைத்தார்.
இதனால் சிறுவன் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளானார். பின்னர் அவரது தாயும், அந்த இடத்திற்கு வந்து சிறுவனை திட்டி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மனவேதனையில் ஆழ்ந்த கிருஷ்ணேந்து, வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவர் தற்கொலைக்குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார், அதில், “அம்மா, நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை. அதை சாலையோரத்தில் கண்டேன்” என எழுதி வைத்துள்ளார். உடனடியாக தம்லுக் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டும், வியாழக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் வெளிவந்ததையடுத்து, கடைக்காரர் சுபாங்கர் தீட்சித் தலைமறைவாக உள்ளார். ஆனால், அவருடைய வீடு மற்றும் கடை மீது பொதுமக்கள் கோபத்தில் தாக்குதல் நடத்தினர். சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன, அதில் சிப்ஸ் பாக்கெட் கடைக்கு வெளியே கிடந்தது தெளிவாக தெரிகிறது, இதுதான் கிருஷ்ணேந்து தன்னுடைய கடைசி வரிகளில் எழுதிய உண்மை.
சுபாங்கரின் குடும்பம், மக்கள் தாக்கியதால் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. சுபாங்கரின் மனைவி கூறுகையில், “எங்கள் வீடு முற்றிலும் தாக்கப்பட்டது, எனது குழந்தைகள் பயத்தில் அலறினர்” என வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம், ஒரு தவறான குற்றச்சாட்டும், சமூக அவமதிப்பும் எவ்வளவு பெரிய உயிரிழப்பாக முடிக்கலாம் என்பதற்கான உதாரணமாக அமைந்துள்ளது. தற்போது, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள், மேலும் கிருஷ்ணேந்துவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.