
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, திருமணமாகி நான்கு நாட்களே கடந்த நிலையில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், துக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமையால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், போலீசார் விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பொன்னேரியை சேர்ந்த 23 வயதான லோகேஸ்வரி என்ற இளம்பெணுக்கும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பன்னீர் என்பவருக்கும் கடந்த ஜூன் 27-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன், 5 சவரன் நகை வழங்கப்படும் என பெண் வீட்டார் உறுதி அளித்திருந்த நிலையில், இறுதியில் 4 சவரன் நகை மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிகிறது.
திருமணத்துக்குப் பிறகு, மாப்பிள்ளை வீட்டார் ஒரு சவரன் நகையை தொடர்ந்து கோரியதோடு, அதைக் குறித்தே தொடர்ந்து மனஉளைச்சலை ஏற்படுத்தும் வகையில் லோகேஸ்வரியை வார்த்தைகளால் வாட்டி அழித்ததாக கூறப்படுகிறது. இந்த மன அழுத்தத்தால், திருமணமான நான்காவது நாளில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பிறகு, பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தற்கொலைக்கான காரணமாக வரதட்சணை தொந்தரவு உறுதிப்படுத்தப்பட்டால், தடுப்புச் சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெண் உறவினர்கள் மட்டுமல்லாமல், உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஒரு சவரன் நகைக்காக ஒரு உயிர்…!” என மக்கள் ஆதங்கமும் , வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.