
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி தங்கம்மாள் உருக்கமான மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது மகன் செந்தில்குமார் வைத்திருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள், சுமார் ரூ .15,000 மதிப்பில் சமீபத்தில் வீட்டில் சுத்தம் செய்தபோது கிடைத்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.
தங்கம்மாள் மனுவில், “இந்த பணத்தை மாற்றிக் கொடுத்தால், நான் ஒரு பெட்டிக்கடை வைத்து என் வாழ்க்கையை நடத்த முடியும். இல்லையென்றால் உயிரையே மாய்த்துக்கொள்வேன்” என கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டுள்ளார். இவர் மகன், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அந்த காலத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த பணமே இப்போது அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த மூன்று முதல் நான்கு முறை இவர் மனு அளித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.
அம்மா அழ கூடாது.. இந்தாங்க பிடிங்க..! பழைய நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்த மூதாட்டி.. ரூ.15,000 கொடுத்து உதவிய சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன்.!#Coimbatore #Singanallore #Jayaraman #CurrencyNotes #Collector #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/4XQzB4ZxMJ
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) July 1, 2025
இந்த வேதனைக்குரிய மனு செய்தியாளர்களின் கவனத்துக்கு வந்ததும், சம்பவம் விரைவில் சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன் அவர்களின் கவனத்திற்கும் சென்றடைந்தது. உடனடியாக அவர் மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்ததோடு, தங்கம்மாளை நேரில் சந்தித்து, “அம்மா அழ கூடாது… இந்தாங்க பிடிங்க” என கூறி, ரூ.15,000 பணம் வழங்கி உதவியுள்ளார். இந்த மனிதநேயச் செயல், அங்கு இருந்த அனைவரையும் மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
பழைய நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், அதனால் பாதிக்கப்படும் ஏழை மக்கள் மீது அரசு எவ்வாறு பதில் சொல்லும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இந்த நிலையில் எம்எல்ஏ ஜெயராமன் எடுத்த இந்த தனிப்பட்ட செயல், அரசியலுக்கு அப்பால் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளது.