
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில்கைது செய்யப்பட்டதாக செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இதனையடுத்து சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் அமலாக்கதுறையின் விளக்கங்களையும், செந்தில் பாலாஜி தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர்.. இந்நிலையில் இந்த வழக்கை 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு இன்று 10:30 மணிக்கு விசாரித்தது. அப்போது நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
அதாவது, மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். அதேநேரத்தில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என கூறிய அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவு பிறப்பித்தார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.