அமெரிக்காவில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மை இந்திய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கமான AILA (American Immigration Lawyers Association) வெளியிட்ட அறிக்கையின் படி, விசா ரத்து செய்யப்பட்ட 327 மாணவர்களில் 50% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது சோகமான விஷயமாகும்.

இந்த தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், பல சர்வதேச மாணவர்கள் கல்விக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களின் F1 (Student Visa) மற்றும் தொடர்புடைய விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்பட்டவர்களில் இந்தியர்களுக்குப் பிறகு சீன மாணவர்கள் 14% இடத்தை பிடித்துள்ளனர். மேலும், தென் கொரியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளும் இதில் இடம்பிடித்துள்ளன.

SEVIS (Student and Exchange Visitor Information System) எனப்படும் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர்களுக்கான தகவல் அமைப்பிலிருந்து, இந்த மாணவர்களின் விவரங்கள் நீக்கப்பட்டதும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

விசா ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாணவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அளித்த 327 புகார்கள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கல்வி கனவு கட்டிய பல இந்திய மாணவர்களுக்கு இது கடுமையான பின்னடைவாக அமைந்துள்ளது.