“வாக்குக் கொடுத்தா அதை உயிரே போனாலும் காப்பாத்தணும்” என்று சொல்வார்கள். அதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய், மனிதநேயத்தின் உச்சக்கட்ட நெகிழ்ச்சிச் சம்பவம் ஒன்று தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. சவூதி அரேபியாவில் வைத்துத் தனது நண்பனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, கேரளாக்காரர் ஒருவர் முப்பத்தி ஐந்து வருடங்கள் கழித்து 1,200 கிலோமீட்டர் தூரம் பயணித்துத் தேடிச்சென்று கடனை அடைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
செல்போனும், சமூக ஊடகங்களும் இல்லாத 1991-ஆம் ஆண்டில் வாங்கிய அந்தச் சிறிய தொகையை, இத்தனை காலம் மனதிற்குள் நேர்மையோடு சுமந்து கொண்டு அலைந்த அந்த மனிதரின் குணம் தற்போது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் அப்கைக் (Abqaiq) பகுதியில் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரும், தெலுங்கானாவைச் சேர்ந்த எட்லா லச்சன்னா என்பவரும் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
அந்தச் சமயத்தில் ஏற்பட்ட அவசரத் தேவைக்காக லச்சன்னாவிடம் இருந்து 120 சவூதி ரியால் (அப்போது அதன் இந்திய மதிப்பு வெறும் ₹1,000) பணத்தை இஸ்மாயில் கடனாக வாங்கியுள்ளார். பணத்தைத் திருப்பித் தருவதாக வாக்குக் கொடுத்த சில நாட்களிலேயே லச்சன்னா எதிர்பாராத விதமாக இந்தியா திரும்பிவிட, போன் வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் இருவருக்குமான தொடர்பு அப்படியே துண்டிக்கப்பட்டது. தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியவில்லையே என்ற தவிப்போடு இஸ்மாயில் முப்பத்தி ஐந்து வருடங்களாகக் காத்திருந்துள்ளார்.
தனது நண்பனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்று முடிவெடுத்த இஸ்மாயில், சமீபத்தில் அவரிடம் எந்த ஒரு விபரமும் இல்லாத நிலையிலும் தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். லச்சன்னா ‘தர்மபுரி’ என்ற ஊரைச் சேர்ந்தவர் என்ற ஒரே ஒரு நினைவை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, கூகுள் மேப் உதவியோடு தேடிப் பார்த்துத் தெலுங்கானாவின் ஜகித்யால் (Jagtial) மாவட்டத்திற்கு 1,200 கிலோமீட்டருக்கும் மேல் ரயிலில் பயணித்துச் சென்றுள்ளார்.
அங்கே உள்ளூர் மக்களின் உதவியோடு ஒருவழியாக லச்சன்னாவின் குடும்பத்தைக் கண்டுபிடித்து நேரில் சந்தித்துள்ளார். அப்போது, தான் அன்று வாங்கிய 1,000 ரூபாய்க்குப் வட்டியையும் சேர்த்து மொத்தம் 25,000 ரூபாயை அவரது குடும்பத்தாரிடம் வழங்கித் தனது 35 வருடக் கடன் பாரத்தை இறக்கி வைத்துள்ளார். தற்போது லச்சன்னா மீண்டும் வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றிருந்ததால், அவரது குடும்பத்தினர் இஸ்மாயிலை வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாகத் தொடர்பு கொண்டு லச்சன்னாவிடம் பேச வைத்துள்ளனர்.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாங்கிய சிறு தொகையைத் தேடி வந்து, அதுவும் இவ்வளவு பெரிய தொகையாகத் திருப்பித் தருவார் என்று தான் கனவிலும் நினைக்கவில்லை என்று லச்சன்னா நெகிழ்ந்து போயுள்ளார். “அவர் வெறும் நேர்மையானவர் மட்டுமல்ல, தங்கம் போன்ற குணம் கொண்டவர்; எங்களது நட்பின் பலமே இதற்குச் சான்று” என்று லச்சன்னா உருகிக் கூறியுள்ளார். நட்பையும் நேர்மையையும் இமயமலை அளவுக்கு உயர்த்திப் பிடித்துள்ள இந்தச் சம்பவம், தற்போது இணையத்தில் லட்சக்கணக்கானோரின் இதயங்களை உருக வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
