இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் யுவராஜ் சிங், தனது தந்தை யோக்ராஜ் சிங் கடந்த காலங்களில் கபில் தேவ் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு எதிராகத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக யோக்ராஜ் சிங், தனது மகன் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு தோனி தான் காரணம் என்று குற்றம் சாட்டி வந்ததுடன், 80-களில் தன்னை அணியிலிருந்து நீக்கியதற்காக கபில் தேவ் மீது வன்மம் கொண்டு துப்பாக்கியுடன் அவர் வீட்டிற்கே சென்றதாகக் கூறி அதிரவைத்தார்.

நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்த யுவராஜ், ‘ஸ்போர்ட்ஸ் டாக்’ (Sports Tak) பாட்காஸ்ட் டீசரில், “கபில் தேவ் மற்றும் எம்.எஸ். தோனியிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்; இது சரியில்லை என்று என் அப்பாவிடமே சொல்லிவிட்டேன்” எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

தனது தந்தையின் குணாதிசயங்கள் மற்றும் அவர் வெளியிடும் விசித்திரமான அறிக்கைகள் தனக்குப் புண்படுத்துவதாகத் தெரிவித்துள்ள யுவராஜ், இந்த விவகாரத்தில் தனது தந்தையுடன் நேரடியாகவே விவாதித்ததாகக் கூறியுள்ளார்.

அதே சமயம், யுவராஜ் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது தோனியின் முடிவல்ல, மாறாகத் தேர்வுக்குழுவின் முடிவுதான் என முன்னாள் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார். 2017-ல் யுவராஜின் எதிர்காலத் திட்டம் குறித்து தோனி அவருக்கு நேரடியாகவே விளக்கியது, அவர் 2019-ல் ஓய்வு முடிவை எடுக்க உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தையின் தனிப்பட்ட வன்மத்தினால் இந்தியாவின் இருபெரும் கேப்டன்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டதைச் சரிசெய்ய யுவராஜ் எடுத்துள்ள இந்த முயற்சி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.