பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் பட்ட துயரங்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுவிட்டு ஆடிஷன் செல்வேன். சில நேரங்களில் அவர்கள் கூறும் விஷயம் எனக்கு செட்டாகாது.

பல சமயங்களில் அவர்களே  என்னை வேண்டாம் என்று கூறி அனுப்பி விடுவார்கள். அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஜிம் டிரெய்னராக வேலை பார்த்தேன். அதோடு குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுப்பது, பாடலில் பின்னணி நடனம் ஆடுவது போன்ற வேலைகளையும் செய்தேன். அப்படிப்பட்ட சமயத்தில் எனக்கு சின்னத்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அப்போது என் அப்பா புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் என் அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை  விட்டுவிட்டு சீரியலில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் இப்போது ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதாவது சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி அல்லது பொங்கல் போன்ற பண்டிகைகளில் தான் மக்கள் என்னை பார்ப்பார்கள். ஆனால் தற்போது சீரியலில் நடிப்பதால் மக்கள் என்னை தினசரி பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார்.