இந்தியாவில் டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். இங்கு ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் வேகமான ஒரு தொழில் நகரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அந்நிறுவனம் தொடங்கியது. இது தற்போது உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையாக மாற இருக்கிறது.

இந்நிலையில் இதே பகுதியில் தற்போது டாடா குழுமம் 2 புதிய உற்பத்தி மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளதோடு, பணியாளர்கள் தங்குவதற்கு வசதியாக வீடுகளும் கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இது தொடர்பாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறும் போது ஜாம்செட்பூரை விட ஒசூர் வேகமான தொழில் நகரமாக வளர்ச்சி அடையும் என்றார். மேலும் இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருவதால் விரைவில் அந்த நகரம் தொழில்நுட்ப மையமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.