கிரிக்கெட் உலகில் சில கதைகள் மிகவும் ஆச்சரியமானவை. 2008-ல் விராட் கோலி தலைமையில் இந்தியா அண்டர்-19 உலகக்கோப்பையை வென்றபோது, அந்த ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை திணறடித்து ‘ஆட்டநாயகன்’ விருது வென்றவர் அஜிதேஷ் அர்கல். அன்று கோலியுடன் சேர்ந்து கோப்பையைத் தூக்கிய அந்த வேகப்பந்து வீச்சாளர், இன்று மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரில் அம்பயராக களம் இறங்கியிருப்பது பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு அஜிதேஷ் பஞ்சாப் அணியில் இடம் பிடித்தார், ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் பரோடா அணிக்காக சில போட்டிகளில் விளையாடிய அவர், 2015-ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றிய போதிலும், கிரிக்கெட் மீதான காதல் அவரை விடவில்லை. 2023-ல் அம்பயர் தேர்வில் தேர்ச்சி பெற்று, இப்போது WPL தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ், ஆர்சிபி போன்ற அணிகள் மோதும் போட்டிகளில் நடுவராக கலக்கி வருகிறார். ஒரு வீரராக ஜொலித்த அதே மைதானத்தில், இன்று நடுவராக தனது இரண்டாவது இன்னிங்ஸை அவர் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார்!
