தமிழக மின்சாரத் துறையில் கடந்த ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்ததில் சுமார் ₹397 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு, தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த முறைகேடு குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து டான்ஜெட்கோ (TANGEDCO) சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும், தற்போது பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு இந்த விவகாரம் குறித்துத் தெரியுமா எனத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
”இந்த மேல்முறையீடு ஊழலை மறைக்க முந்தைய அரசால் செய்யப்பட்டது. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இதில் உடனடியாகத் தலையிட வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க முற்பட்ட அந்த மேல்முறையீட்டு மனுவைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாற்று அரசியல் பேசும் விஜய் அரசு, இந்த ஊழல் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கி வருகிறது.
