
தமிழக வெற்றி கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாகிகளுக்கு இன்று சேலத்தில் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, நாம் முதலில் ரசிகர் மன்றமாக இருந்த நிலையில் அடுத்து மக்கள் இயக்கமாக மாறி தற்போது தமிழக வெற்றிக் கழகமாக அரசியல் களத்தில் திகழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று விஜயின் கொடி தமிழக முழுக்க பறந்து கொண்டிருக்கிறது. நான் பல நாட்களாக நினைத்ததை தற்போது சொல்கிறேன். இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நான் சொன்ன நிலையில் உடனே மண்டபத்தை அமர்த்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள்.
நான் கடந்த 5 வருடங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதே நான் இந்த பதவி வரும் போகும். ஆனால் விஜய் ரசிகர் மன்ற பதவி என்பது நிரந்தரம் என்று கூறினேன். அதுதான் இன்றும் என்னுடைய நிலைப்பாடு. அதேபோன்று எனக்கு பிளாக் கேட்ஸ் மற்றும் பவுன்சர் எல்லாம் போட வேண்டாம். நான் ரசிகராகவே உங்களுடன் இருக்க விரும்புகிறேன். மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக சில அடிப்படை அரசியல் அறிவுகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் என்னுடைய பெயருக்கு பின்னால் நிரந்தர பொது செயலாளர் பதவி போட்டுள்ளீர்கள். எனக்கு விஜய் பொதுச் செயலாளர் பதவி மட்டும் தான் வழங்கியுள்ளார். ஆனால் அது நிரந்தரமா அல்லது தற்காலிகமா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.