தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணிக்கு வராத நிலையில், வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, அ.தி.மு.க.வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்), பா.ஜ.க. தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் இணைப்பதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், தற்போது நிலவும் அரசியல் சூழலை உணர்ந்து, அவர்களைச் சேர்ப்பதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்கு முன், இபிஎஸ் தரப்பு ஒரு கடும் நிபந்தனையை விதித்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. அதாவது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் இணைந்தாலும், அவர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலைச் சின்னத்தின் கீழ் மட்டுமே போட்டியிட வேண்டும் என்றும், அவர்களுக்கான இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிபந்தனைக்கு பா.ஜ.க. தலைமையோ அல்லது ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்போ சம்மதிக்குமா? என்றும், இதன் மூலம் அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்புகள் ஏற்படுமா? என்றும் தமிழக அரசியல் களம் பரபரப்பாக விவாதித்து வருகிறது
