மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் கேக் வெட்டி அங்குள்ள அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். தொடர்ந்து மக்களவைத் தேர்தலுக்கான இலட்சினையை  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். “தமிழ்நாடு உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்” என்ற தேர்தல் முழக்கம் அடங்கிய இலட்சினையை இபிஎஸ் வெளியிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவது போன்ற தேர்தல் பரப்புரை ஏi தொழில்நுட்பம் மூலம் காணொளி வெளியிடப்பட்டது.

இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததும் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தமிழக மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்வார்கள்.

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கூட காக்க முடியாத அரசு திமுக அரசு. காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தை நிறுத்தி வைக்கும் அளவிற்கு அழுத்தம் கொடுத்தது அதிமுக உறுப்பினர்கள் தான். திமுக அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் எழுப்பவில்லை. கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயன்ற போது அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக.

நீட் பிரச்சனையை எழுப்பி நாடாளுமன்றத்தை திமுக முடக்கவில்லை. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் திமுக கூட்டணி தான். திமுகவின் 38எம்பிக்களும் இதுவரை 9,695 கேள்விகள் மட்டுமே நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளனர். நாட்டு மக்களை விட்டுவிட்டு வீட்டு மக்களுக்கு மட்டுமே திமுக உழைக்கிறது. பாஜகவுடன் யார் ரகசிய உடன்பாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரச்சாரத்தை பரப்புகின்றனர். அதனை முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும். கோ பேக் மோடி என்று கூறியவர்கள் இன்று தற்போது வெல்கம் மோடி என்று கூறுகின்றனர்.

இரட்டை நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் பிரதமர் மோடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். அதிமுக சார்பில் வெற்றி பெறுபவர்கள் ஒருமித்த கருத்துடன் செயல்படுவார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் அதிமுக தொடங்கியுள்ளது” என தெரிவித்தார்.