எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 85 சதவீதம் நிறைவு செய்ததற்காக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் காரணத்தை கூறியுள்ளார். அதாவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர்கள் நாங்கள்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.ஆனால் அப்படிப்பட்ட திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. இதனால்தான் அந்த விழாவினை புறக்கணித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தின் போது கோகுல இந்திரா பேசியதாவது, என்னை பார்த்தாலே கையெடுத்து கும்பிட சிலர் பயப்படுகிறார்கள். என்னை பார்த்தவுடன் பலர் பயப்படுகிறார்கள். என்னுடைய போட்டோவை கார்னரில் போட கூட பயப்படுகிறார்கள். இதை எல்லோரும் தவிர்க்க வேண்டும். இப்போது சொல்கிறேன் யார் வேண்டுமானாலும் வரலாம். யாரை வேண்டுமானாலும் பொதுச் செயலாளர் தேர்வு செய்யலாம். சீட் வேண்டும் என்பதற்காக யாரும் கேட்கலாம். இதை நான் யாருடைய மனதும் புண்பட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. என்னை தென்சென்னை பொறுப்பாளராக பொதுச்செயலாளர் நியமித்த பிறகு நிறைய பேர் அழைப்பார்கள்.

ஆனால் பொதுச்செயலாளர் போட்ட உத்தரவுக்கு மாறாக தென் சென்னை மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் நான் தேர்தல் பணிகளில் தலையிட்டது கிடையாது. நாம் மூக்கை நுழைக்க கூடாது நாம் தலையிடுவதால் பிரச்சனை வந்து விடக்கூடாது என்பதால் ரொம்ப ரொம்ப நாகரிகமா ஒதுங்கிக் கொண்டேன். நான் யாருக்கும் கொடுப்பதும் கிடையாது குரூப்பிசம் செய்வதும் கிடையாது. எங்களைப் பார்த்தால் எங்களிடம் பேசினால் எங்கள் போட்டோவை போட்டால் கட்சி பதவி பறிபோய்விடும் என்ற எண்ணத்தை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

நான் தென் சென்னையில் 4மாவட்ட செயலாளர்களுடன் பணியாற்றியுள்ள நிலையில் என்னால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு அல்லது இடையூறு ஏற்பட்டுள்ளதா.? யாரை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்பது பொதுச் செயலாளரின் முடிவு தான். நான் சீட் கேட்கவில்லை.அப்படி நான் எதிர்பார்க்கும் நிலையில் என்னுடைய பெயரை போஸ்டரில் போடக்கூடாது என்னுடைய பெயரே தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள். மேலும் இந்த கூவத்தின் வெள்ளத்தில் கழுத்தளவு தண்ணீரில் உங்களோடு உங்களாக நின்று என்னை மறக்க எப்படி உங்களுக்கு மனம் வருகிறது என்று கூறினார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோகுல இந்திரா மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தற்போது அதிமுக கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுக வழக்கில் கூடிய விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தெரிய வரப்போகிறது. இந்த நிலையில் சீனியர்கள் பலரும் இப்படி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.