அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று கோபி செட்டிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது ஒட்டப்பட்ட போஸ்டர் தற்போது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் இருக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் புகைப்படங்கள் சரிசமமாக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவின் போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறி அந்த விழாவினை செங்கோட்டையன் நிராகரித்தார். இதனால் அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை அந்த கட்சி தலைவர்கள் மறுத்தனர்.

ஏற்கனவே கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் வரிசையில் செங்கோட்டையனும் அதிக முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு செங்கோட்டையன் தான் முதலமைச்சர் ஆவார் என்று கூறப்பட்ட நிலையில் அவரை முந்தி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். ஓ பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையனை பாஜக அதிமுக தலைமைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் அதன் தாக்கம் தான் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே பிளவு என்றும் கூறப்பட்டது. மேலும் இந்த நிலையில் தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இணையாக செங்கோட்டையன் போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.