
அதிமுக கட்சியில் சமீபத்தில் 82 மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார். இதில் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது நிலையில் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாத நிலையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புறக்கணித்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு மற்றும் முக்கியத்துவம் கொடுத்ததால் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.
இதிலிருந்தே நடந்த சில சம்பவங்கள் மூலம் செங்கோட்டையன் அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையும் அதை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமாரிடம் நிருபர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆகியோருக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் பதவி கட்சியில் வழங்கப்படவில்லை. நானும் ஒரு மாவட்ட செயலாளராக இருப்பதால் எனக்கும் தேர்தல் பொறுப்பாளர் பதவி வழங்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களை கவனிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளர் பதவிகளை கொடுக்கவில்லை. மேலும் அதிமுக கட்சியில் 82 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் இதில் யாருடைய பெயரும் தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்று கூறினார்.